97021
'Tea Boy' எனக்கு விவரம் தெரிஞ்ச நாளில் இருந்து டீ வாங்கிட்டு வருவது தான் என் வேலை..
நான் இருந்த குடிசை பகுதியில் நான் சும்மா சாலையில் நடந்து போனால் கூட என் கையில் காசும் ஒரு சொம்பும் கொடுத்து டீ வாங்கி வர சொல்வார்கள்.
ஒரு கிமீ தூரம் இருக்கும் டீ கடைக்கு சென்று டீ வாங்கிவிட்டு இரண்டு செய்தித்தாளை மடித்து சொம்பின் விளிம்பில் பிடித்து சொம்பின் சூடு தாங்க முடியாமல் கொஞ்ச தூரம் நடப்பேன் பிறகு சாலையில் வைத்துவிடுவேன் இப்படியே கொஞ்சம் கொஞ்சமாக தூக்கி வந்து கொடுத்துவிடுவேன்..
சிலர் மிட்டாய் வாங்க காசு கொடுப்பார்கள் அது பெரிய விசியம் என நினைத்து இதை தொடர்ந்து செய்ய.
ஷாம்பூ சீயக்காய் எண்ணெய் என எல்லாருக்கும் எல்லா பொருளும் வாங்கி வந்து கொடுப்பேன்..
இன்றைய காலத்து delivery boy போல அன்று இருந்தேன்.
இது எது வரை தொடர்ந்தது தெரியுமா ?
நான் ஐந்தாம் வகுப்பு படிக்கும் வரை தொடர்ந்தது.
அல்லது ஒரு சம்பவம் செய்தேன் அதோடு என்னிடம் யாரும் இந்த வேலையை தரவில்லை.
எங்கள் தெருவில் 10ஆம் வகுப்பு படிக்கும் பையன் ஒருவன் இருந்தான்..
அவனை கண்டால் எல்லா பசங்களும் பயப்படுவார்கள்..
அவன் பார்க்க மிக கெட்டவனாக இருந்தான்.
பிடி பிடிப்பான் , A படத்துக்கு சென்று வந்து வீட்டில் அடி வாங்குவான். பெண்களை கிண்டல் செய்வான்.
சின்ன பசங்க என்றால் அவர்களை பிடித்து வைத்து மிரட்டுவான்.
துணியை அவுத்து விட்டு ஓடவிடுவான்..
இப்படி எல்லா பசங்களும் அவனை கண்டாலே பயப்படுவார்கள்.
அவன் ஒரு காண்ட்ராக்ட் எடுக்கும் நபரின் மகன் என்பதால் யாரும் அவனை கேள்வி கேட்கமாட்டார்கள்.
சொந்த கிணறு 2 சக்கர வாகனம் VCR கலர் டிவி என வசதியான குடும்பம்.
இப்படி இருக்க ஒரு நாள் வழக்கம் போல கடைக்கு யாரோ என்னை அனுப்ப நான் அவன் சாலையில் நிற்பதை பார்த்துவிட்டு பயப்பட தொடங்கிவிட்டேன்..
என் பயத்தை அவன் அறிந்துகொண்ட பின் சாலையை மறித்து நின்றுவிட்டான்..
காசு கொடுத்தால் தான் விடுவேன் என என் கையில் உள்ள காசை பிடுங்க தொடங்கினான்..
அவனிடம் இருந்து தப்பித்து ஓடினேன்..
அவன் என் பின்னே விடாமல் என்னை துரத்தி வந்தான்..
என் வீடு வரை ஓடி வந்த நான் என் வீட்டில் நுழையாமல் எதிர் வீட்டில் நுழைத்து தோட்டத்தில் அவர்கள் அடுக்கி வைத்து இருந்த பெரிய சவுக்கு கட்டையை தூக்க முடியாமல் தூக்கி விளாசினேன் அவன் மேல் அடி பட்டதும் அடிக்காத வலிக்குது என பின் வாங்குவது போல பின் வாங்கி மீண்டும் என்னை பிடிக்க வந்தான் ..
மேலும் அடித்தேன்..
அவன் முகத்தில் பயத்தை பார்த்தேன்
கெஞ்ச தொடங்கினான்..
நான் விடவே இல்லை..
அருகில் இருந்தவர்கள் வந்து என்னை தடுக்கும் வரை அடித்தேன்..
அந்த சம்பவத்திற்கு பிறகு அந்த பகுதியில் அதன்பின் யாரும் என்னை எதற்கும் கடைக்கு போக சொல்லவில்லை ..
அவனும் என்னை கண்டால் ஒதுங்க தொடங்கிவிட்டான். நான் வருவதை பார்த்தால் வீட்டுக்குள் சென்று விடுவான்.
ஒரு கெட்ட பையனை அதுவும் என் வயதை விட பெரிய பையனை அடித்ததால் நான் எங்கு சென்றாலும் அதை பற்றி தான் கேட்பார்கள் ..
தப்பு பண்ணா அப்படி தான் அடிக்கணும் என பெருமையாக சொல்வேன்.
அவனை அடித்ததற்காக
பல பெண்கள் பாராட்டினார்கள்
அப்பொழுது என் அம்மா இந்த விசியாத்தை சொல்லி என்னை அடிக்கடி பாராட்டுவார்..
+++++++
சமீபத்தில் சமூக வலைத்தளத்தில் அவனை பார்த்தேன்..
வக்கீலாக இருக்கிறான்.
நான் இன்னமும் Tea boy யாக இருக்கிறேன்.
A short story of a unofficial tea boy
No comments:
Post a Comment